Amazon

Wednesday, 1 February 2017

வறண்ட பூமியில் சந்தன மரம்

வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம்.
அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுக்கு முன் ஏக்கருக்கு 300 சந்தன மரக்கன்று வீதம் 3,000 கன்றுகளை நடவு செய்தேன். பெங்களூருவில் இருந்து ஒரு கன்று ரூ.150க்கு வாங்கினேன். 2 ஆண்டு நன்கு பராமரித்து, வளர்ந்த பின் முறையாக தண்ணீர் விட்டும், பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தால் போதும். 15 முதல் 20 ஆண்டு கழித்து வருவாய்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டலாம்.
வளர்ந்த மரங்களில் 30 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய மரங்களை நாமே விற்கலாம். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் சந்தன மரங்களை வறண்ட சிவகங்கையில் வளர்க்கும் நோக்கில் வளர்க்கிறேன். சந்தன மரங்களை அரியானா, அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி, அங்கு சந்தன தைலம் தயாரிப்பர். அன்றைய அரசு விலை நிர்ணயப்படி பல லட்சம் வருவாய் கிடைக்கும், என்றார்

ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி

“உழுதவன் கணக்கு பார்த்தால் தார் கம்பு கூட மிச்சமாகாது” என்பது கிராமப்புற விவசாயிகள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.
எப்படி: இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார். செடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.
ஏக்கர் / 4,00,000. (10,000 x 50 = 5,00,000).
வருமானம் – ரூ.5,00,000. செலவு – 1,00,000. நிகர வருமானம் – ரூ.4,00,000.
செலவு: உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.
இவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார்

‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும், சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல. வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.
இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன. இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும். பசுந்தாள் உரப் பயிர்களான சீமை அகத்தி, சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.
பசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம். தமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு, மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும், இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம்.
பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும். மா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.

இயற்கை முறை நாவல் சாகுபடி

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன. சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறார். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடியை பயன்படுத்துகிறார்.
நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது. சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். இங்கு ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர்.
விவசாயி கூறியதாவது: ராஜமுந்திரியில் “ஜம்பு’ ரக நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன். ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும் 22க்கு 22 அடி இடைவெளி உள்ளது. அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன். மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.
நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 க்கு விற்கிறோம். சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் “நாவல் ஜூஸ்’ தயாரிக்கிறோம். 700 மி.லி., ஜூஸ் பாட்டிலை ரூ.170 க்கு விற்கிறோம். ஆண்டிற்கு குறைந்தது ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றார்.

இயற்கை முறை கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது.
விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம்.
கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும்.
தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.
காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125.
முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20.
பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.
மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்

உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி பற்றி கூறுகிறவதாவது. 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார். அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார். இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன. இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார். சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது. பயிர்களுக்கான தண்ணீரை.
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.
இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம். விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.
இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்). உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன். என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு.

இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை

தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை
கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட
வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ
வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து,
இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க
வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும்
குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்)
ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.
இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ
கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம்
உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல்
வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில்
நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி
விடும்.
இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.
இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய
இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும்
ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி
விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி
கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு
தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி
மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து
இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத்
தெளிக்கலாம்.